2வது ரோப்கார் பணிகள் பழநியில் ஜூனில் துவக்கம்!
ஜூன் முதல் வாரத்தில் பழநி கோயிலில் 2வது ரோப்கார் அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்வதற்காக மேற்கு கிரிவீதியில் இருந்து 3 மின்இழுவை ரயில்கள் (வின்ச்) இயக்கப்படுகின்றன. தெற்கு கிரிவீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப்கார் 2004, நவம்பர் 3ம் தேதி முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. இதில் 1 மணி நேரத்திற்கு சுமார் 350 பேர் மட்டுமே பயணிக்க முடிகிறது.
இதனால் விடுமுறை தினங்கள், விசேஷ நாட்களில் ரோப்கார் நிலையத்தில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. எனவே, 2வது ரோப்கார் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்குப்பின் 2வது ரோப்கார் அமைக்க தற்போது டெண்டர் விடுக்கப்பட்டது. இதனடிப்படையில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ.71 கோடியில் 2வது ரோப்கார் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்டது. 2வது ரோப்காரில் 1 மணி நேரத்தில் சுமார் 1,200 பேர் பயணிக்கலாம். இதற்கான பணிகள் ஜூன் முதல் வாரம் துவங்க உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.