பொங்கல் பண்டிகையை ஒட்டி மாநிலம் முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும்..!

இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் போக்குவரத்து ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் 2-அம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளதை அடுத்து  பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து  அமைச்சர் சிவசங்கர் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் போக்குவரத்துதுறை செயலாளர் பனீந்திர ரெட்டி  உள்ளிட்ட  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை முடிந்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், பொங்கல் பண்டிகையை ஒட்டி 11,006  சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயங்கும். மாநிலம் முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும் என தெரிவித்தார். தென்மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும். கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். கேகே நகர், தாம்பரம், பூந்தமல்லி, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் செல்லும் போது இடையூறு இன்றி பேருந்துகளை சுமூகமாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்.! தொழிற்சங்கங்கள் அறிவிப்பு.!

ஒட்டு மொத்தமாக 11 முன்பதிவு மையங்கள் செயல்படும். சிறப்பு பேருந்துகள் குறித்து அறியவும், புகார் 14436 94450 14450 94450 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். பொங்கல் முடிந்து ஊர் திரும்ப 17,589 சிறப்பு பேருந்து இயக்கப்படும்  என தெரிவித்தார்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சவுந்தராஜன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இந்த பேச்சுவார்த்தையில் நாங்கள் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் அதனை பொங்கலுக்கு பிறகு ஆலோசிக்கலாம் என திருப்தியற்ற பதிலை அதிகாரிகள் கூறுகின்றனர்.  வரவு செலவு பற்றாக்குறை விவரங்கள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வுஊதிய திட்டத்தை செயல்படுத்துவது, 15வது ஊதிய ஒப்பந்த கொள்கை நிறைவேற்றம். வாரிசுக்கு வேலை, ஓய்வூதியர்களின் நிலுவை தொகை, பஞ்சபடி என எதன்மீதும் தற்போது பதில் கூற முடியாது என அதிகாரிகள் கூறுகின்றனர்.

6 அம்ச கோரிக்கையை ஒரு கோரிக்கையாக மாற்றிவிட்டோம் ஆனாலும் அதனை அரசு ஏற்க மறுக்கிறது. இன்று இரவு வரை காலம் இருக்கிறது. அதற்குள் மீண்டும் அழைத்து பேச தயார் என்றால் நாங்களும் பேச தயார். இல்லையென்றால் நாளை முதல் ஏற்கனவே அறிவித்தபடி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் உறுதிபட கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்