“கொலை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது தான் காரணம்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு!
அதிமுக ஆட்சியில் 2012-ல் 1943 கொலைகள் நடந்துள்ளன. திமுக ஆட்சியில் 2021-ல் 1540 கொலைகள் நடந்துள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நிகழந்த அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் குறித்தும் விவாதிக்க கூறினார். அதன் பிறகு அமளி ஏற்பட்டு அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதனை தொடர்ந்து தமிழகதில் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர் நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 4 கொலைகள் நடந்ததாக கூறினார். இதுகுறித்து சட்ட ஒழுங்கு பற்றியும் விமர்சித்துவிட்டு சென்றுவிட்டார்.
4 கொலைகள் :
கோவை சம்பவம் முதற்கட்டமாக தற்கொலை என கூறப்பட்டுள்ளது. மதுரை சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிவகங்கை சம்பவம் குடும்ப தகராறு எனக்கூறப்பட்டுள்ளது. ஈரோடு சம்பவம் பற்றி நான் கூறுகிறேன். சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜான் எனும் சாணக்யா, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிணையில் வெளியே வந்துள்ளார். அன்னதானபட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு, மனைவியுடன் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
போலீஸ் என்கவுண்டர் :
அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் ஜானை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் நிகழ்விடத்திலேயே ஜான் உயிரிழந்துவிட்டார். காயம் அடைந்த ஜான் மனைவி சித்தோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன், பூபாலன், சதீஷ் , கார்த்தி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். அப்போது அவர்கள் காவலர்களை தாக்க முற்பட்டனர். இதனால் தற்காப்புக்காக சித்தோடு காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
பழிவாங்கும் நடவடிக்கை
இதில், சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. இவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் முதலில் சிகிச்சை பெறப்பட்டு, அதன் பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த கொலை சம்பவமானது, கடந்த 2020-ல் சேலத்தில் நடந்த கொலை சம்பவத்தில் 2வது எதிரியாக ஜான் உள்ளார் என்றும், அதற்காக பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என கூறபடுகிறது. தொடர் விசாரணை நடந்து வருகிறது.
காவல்த்துறை சுதந்திரமாக செயல்படுகிறது
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு நன்றாக இருக்கிறது. காவல்த்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் எந்த பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றம் நடந்தால் துரித நடவடிவகை, குற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2024-ல் மட்டும் 4,572 சமூக விரோதிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 2023-ல் கொலை வழக்கானது 49,280 ஆக இருந்தது. இவர் 2024-ல் 31,438 என குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17,782 கொலை குற்றங்கள் குறைந்துள்ளது. சில இடங்களில் நடக்கும் கொலை சம்பவங்கள் வீடியோவாக சமூக வளைதளத்தில் வெளியவாவதால், அதனை அதிகம் பேர் பகிர்வதால் சட்டம் ஒழுங்கு அதிகளவில் சீர்குலைந்துள்ளது என கூறுகின்றனர். கடந்த கால ஒப்பீட்டின் படி 6.8 விழுக்காடு குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளது. பழிக்குப்பழி குற்றங்கள் 42.7% குறைந்துள்ளது.
கொலைகள் – திமுக அதிமுக :
திருவிழா, சுற்றுலாதலங்கள் போன்ற இடங்களில் கூடுதல் காவல் துறை பணியாற்றி வருகின்றனர். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 2023-ல் 183 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024-ல் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகள், 2024-ல் 180 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவம் குறித்து ஆண்டுவாரியாக கணக்கிட்டால், 2012 முதல் 2024 ஆண்டு வாரியாக அதிமுக ஆட்சியில் மிக மிக அதிகம். 2012-ல் 1943 எனும் அதிகபட்ச எண்ணிக்கை உள்ளது. 2013-ல் 1927 என்ற எண்ணிக்கையில் கொலை சம்பவம நிகழ்ந்துள்ளது. கொரோனா காலத்தில் கூட கொலை குற்றங்கள் அதிமுக ஆட்சியில் குறையவில்லை. திமுக ஆட்சியில் 2024-ல் 1621 கொலைகள் நடந்துள்ளன. 2021-ல் மிக குறைவு. அந்தாண்டில் 1,540 கொலைகள் மட்டுமே நடந்துள்ளது.”என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.