வரும் 19 முதல் பள்ளிகள் திறப்பு – அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு.!
பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா இன்னும் ஓயவில்லை, கல்வியை விட குழந்தைகளின் உயிர் முக்கியம். பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறுகையில், தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், நோய் தொற்றை யோசிக்கும்போது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். சமீபத்தில் பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் சில நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இது தற்போது இந்தியாவிலும் ஒருசிலருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசே கூறிருந்தது.
கொரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரம் அவசரகால பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், ஓரளவு நிலைமை சரியான பின்னர் பள்ளிகளை திறப்பதுதான் சரி என்று ஒரு மருத்துவராக நான் தெரிவிக்கிறேன். எனவே, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.