188 ஆற்றுப் பாலங்கள் 638 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் ! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,நபார்டு வங்கி கடன் உதவியுடன் 638 கோடி ரூபாய் மதிப்பில் 188 ஆற்றுப் பாலங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை வழங்கிய பின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
மதுரையில் அரசு அலவலர்களுக்கான 100 எண்ணிக்கை கொண்ட சி வகை குடியிருப்பு கட்டடம் கட்டும் பணி 25 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தீயினால் பாதிக்கப்பட்ட பாரம்பரியமிக்க புராதன கட்டடமான ஹுமாயுன் மகாலை புனரமைக்கும் பணி 36 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். மதுரை எம்ஜிஆர் பேருந்து நிலையம் முதல் கூடல் நகர் ரேடியோ நிலையம் வரை புதிய நான்கு வழி இணைப்புச் சாலைகள் 50 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைத்து அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
நபார்டு வங்கி கடனுதவியுடன் 638 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 188 ஆற்றுப் பாலங்கள் நடப்பாண்டில் கட்டப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் 1213 கிராமங்களில் வசிக்கும் சுமார் 60 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார். 2000 கிலோ மீட்டர் நீள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தி 800 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.