18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு ..! கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு..!அனைவரும் விடுதலை..!அதிரடி தீர்ப்பு
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2000-ஆம் ஆண்டு ஜுலை 30 ஆம் தேதி அன்று கன்னட நடிகர் ராஜ்குமார் ஈரோடு அருகே தாளவாடி தொட்டகஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு பின்னர் சில நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டார்.
வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், மல்லு, மாறன், கோவிந்தராஜ் என்கிற இனியன், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என்கிற சத்யா, அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், புட்டுசாமி, கல்மண்டிராமா, ரமேஷ் ஆகிய 14 பேர் மீது தமிழகம் மற்றும் கர்நாடக அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கான கோபி செட்டிபாளையம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 2006-ஆம் ஆண்டும், அல்சைமர் எனும் நோயால் அவதிப்பட்டு வந்த முக்கிய சாட்சியான அவரது மனைவி பர்வதத்தம்மாள் கடந்த ஆண்டும் காலமாகி விட்டனர். முக்கிய குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
இந்த வழக்கு சுமார் 18 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் , கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை 10 நீதிபதிகள் விசாரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி இந்த வழக்கானது மீண்டும் விசாரனிக்கு வந்தது. அப்போது, வருகிற 25-ம் தேதிக்கு (இன்று) வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் என்றார். அதன்படி, பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிலையில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் குற்றத்தை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் இல்லை என்று கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்
18 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.