18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : டிடிவி தரப்பு அதிரடி வாதம்..!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தொடர்பாக 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்று விசாரணையை தொடங்குகிறார்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி மனு அளித்தார்.
பின்னர் தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு கடந்த ஜூலை 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக 3வது நீதிபதி சத்யநாராயணன் அறிவித்தார். வரும் 23 முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விசாரணை என்று நீதிபதி சத்யநாராயணன் தெரிவித்தார்.டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதையடுத்து மூன்றாவது நீதிபதிக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இன்று காலை விசாரணையை தொடங்கினார்.
இந்த விசாரணையில் டிடிவி தரப்பு வாதாடிய போது; 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் ஜக்கையனுக்கும் தங்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் , 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது; உள்நோக்கம் கொண்டது. மேலும் அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை. என்று டிடிவி தினகரன் தரப்பு வாதிட்டது.