18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவது உறுதி! என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன்!எம்எல்ஏ பகீர் தகவல்

Default Image

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை வாபஸ் பெறுவது உறுதி என்று தினகரன் தரப்பு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டியில்  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நீதிமன்றத்தின் மாறுபட்ட தீர்ப்பை கண்டித்தே வழக்கை வாபஸ் பெறுகிறேன். என் முடிவை தினகரனிடம் சொல்விட்டேன், அவரும் ஏற்றுக்கொண்டார் என்றும்  தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.மத்திய, மாநில அரசு நீதிமன்றத்தை விலைக்கு வாங்கி விட்டது. வழக்கை வாபஸ் பெற்று கொண்டு எனது தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக தங்க தமிழ்ச்செல்வன் சபாநாயகரின் உத்தரவுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடிவு செய்தார். 3-வது நீதிபதியின் தீர்ப்பு தாமதம் ஆகலாம் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்கிறார்.

19 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியை விட்டு நீக்க வேண்டும் என்று தமிழக கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் புகார் தெரிவித்தார்.அதன் அடிப்படையில் 19 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவிட்டார். அதில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தார். மற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி விளக்கம் அளிக்காததால், அவர்கள் அனைவரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 14 ஆம் தேதி வெளியானது.

Image result for தங்கதமிழ்ச்செல்வன்

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும், நீதிபதி எம்.சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் முரண்பட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் 3-வது நீதிபதியின் விசாரணைக்கு அந்த வழக்கு செல்கிறது.

முன்னதாக இந்த தீர்ப்பு வெளியாவது குறித்த தகவல் அறிந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன்(ஆண்டிப்பட்டி), வெற்றிவேல்(பெரம்பூர்), பழனியப்பன்(பாப்பிரெட்டிபட்டி), செந்தில்பாலாஜி (அரவக் குறிச்சி), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை) உள்பட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

அப்போது தங்க தமிழ்ச்செல்வன், “ஐகோர்ட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரவில்லை என்றாலும், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு செல்லமாட்டோம்” என்று தெரிவித்தார். ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், “18 எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை கேட்டு சுப்ரீம் கோர்ட்டு செல்வோம்” என்று கூறினார்.

இந்த முரண்பாடு குறித்து டி.டி.வி.தினகரனிடம் கேட்டபோது அவர், “தங்க தமிழ்ச்செல்வன் அவருடைய நிலைப்பாட்டை தெரிவிக்கிறார். அவரும்(தங்க தமிழ்ச்செல்வனும்), வெற்றிவேலும் என்னுடைய 2 கண்கள் மாதிரி” என பதில் அளித்தார்.

இந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வன், தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக திடீரென தெரிவித்து உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில்,

கட்சி தாவல் தடைச்சட்ட வரம்பின்கீழ் நாங்கள் வரவில்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் தடைச்சட்டம் பாய்ந்து இருக்க வேண்டும். இதே நீதிபதி தான் அவர்கள் நிரபராதி என்று தீர்ப்பு அளித்தார். ஆனால் எங்களை கண்டித்து இருக்கிறார். இது ஒருதலைபட்சமான தீர்ப்பு.

அரசாங்கத்தின் சொல்படிதான் ஐகோர்ட்டு கேட்கிறது. கோர்ட்டால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியவில்லை. இந்த அரசை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஈடுபட்டு இருக்கிறார்.

Image result for தங்கதமிழ்ச்செல்வன்

என்னுடைய தொகுதியில் கடந்த 9 மாதங்களாக எம்.எல்.ஏ. இல்லை. இதனால் மக்கள் அடிப்படை பிரச்சினைகளை கேட்டு நிவர்த்தி செய்ய முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

எங்கள் வழக்கில் 3-வது நீதிபதி விசாரணை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எப்படியும் அந்த தீர்ப்பு வெளிவருவதற்கு ஓராண்டு காலம் ஆகலாம்.

என்னுடைய தொகுதிக்கு எம்.எல்.ஏ. வேண்டும். எனவே சென்னை ஐகோர்ட்டில் நான் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெறுகிறேன். அதன்பிறகு, என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து ஒரு நிரந்தரமான எம்.எல்.ஏ. வரட்டும். பொதுமக்களும் பயன் அடையட்டும். அதற்காகத்தான் நான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

9 மாதங்களாக 3 லட்சம் மக்களுக்கு என்ன நீதி வழங்கப்பட்டு இருக்கிறது? இது எனக்கு பிடிக்கவில்லை. உடனடியாக என்னுடைய தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தி எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு தான். மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு பற்றி எனக்கு தெரியாது.

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால் நல்லவர்களாகிய எங்களுக்கு கெட்ட தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரிடம், “உங்கள் முடிவை டி.டி.வி.தினகரனிடம் தெரிவித்து விட்டீர்களா? நீங்கள் டி.டி.வி.தினகரனுடைய அணியில் தான் நீடிக்கிறீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “என்னுடைய முடிவை முதலில் டி.டி.வி.தினகரனிடம் தான் தெரிவித்தேன். அவர் வழக்கை வாபஸ் பெறுவதற்கான மனுவை தலைமை நீதிபதியிடம் கொடுக்க வேண்டாம். 3-வது நீதிபதி நியமிக்கப்பட்ட பிறகு, அவரிடம் கொடுங்கள் என்று ஆலோசனை வழங்கினார். அதன்படி செயல்படுவேன். நான் தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அணியில்தான் நீடிக்கிறேன்’ என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்