நெடுவாசலில் 174 நாள்களாக நடந்த போராட்டம் வாபஸ்..! மாற்று வழியில் தொடர்ந்து போராடவும் முடிவு…

Default Image

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 174 நாள்களாக நடந்துவந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு எடுக்க முயற்சித்தால், போராட்டம் வேறு வடிவில் மீண்டும் தொடங்கும் என்று எச்சரித்தனர்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு பிப்ரவரி 15-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதனையடுத்து, பிப்ரவரி 16-ஆம் தேதி இந்தத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகியப் பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின.
பின்னர், திட்டம் செயல்படுத்தப்படாது என்ற மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதியளிப்பை ஏற்று 22 நாள்கள் நடைபெற்றப் போராட்டம், மார்ச் 9-ஆம் தேதி கைவிடப்பட்டது.
இந்த நிலையில், மார்ச் 27-ஆம் தேதி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஐட்ரோகார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கினார்.
மத்திய, மாநில அரசுகளால் நம்பவைத்து ஏமாற்றப்பட்டதை அறிந்த மக்கள், இதனைக் கண்டித்து, ஏப்ரல் 12-ஆம் தேதி நெடுவாசலில் மக்கள் மீண்டும் போராட்டத்தைக் கையிலெடுத்தனர்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்திய மக்கள், நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே தொடர்ந்து 174 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டக் குழுவின் உயர்நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தி.புஷ்பராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அவர், “திட்டத்தை ரத்துசெய்யக் கோரி, தங்களின் விவசாய வேலைகள், வாழ்வாதாரப் பணிகளை துறந்து பல மாதங்களாக காந்திய வழியில் மக்கள் போராடி வருகின்றனர்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை. அதனால், அறவழிப் போராட்டத்தை, போராடும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு காந்தி பிறந்த நாளான இன்று (அதாவது திங்கள்கிழமை) தாற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்.
இனி நெடுவாசல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் எரிவாயு எடுக்க மத்திய அரசோ, பிற நிறுவனங்களோ முயற்சித்தால், போராட்டம் வேறு வடிவில் மிகப்பெரிய அளவில் மீண்டும் தொடங்கும்” என்று எச்சரித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்