அதிர்ச்சி.. தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 17 வயது மாணவன் உயிரிழப்பு!
12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடித்துவிட்டு சக நண்பர்களுடன் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு.
கடந்த மாதம் கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன்பின்னர் கெட்டுப்போன சிக்கன் சவர்மா கொடுக்கப்பட்டதால்தான் இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, உணவகத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சவர்மா கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், சவர்மா சாப்பிட்டு பள்ளி மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், தற்போது சாப்பாட்டால் மேலும் ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது, தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 17 வயது மாணவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை ஆரணியில் 12ம் வகுப்பு மாணவன் திருமுருகன் (17) தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளார் என அந்த மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என கூறப்படுகிறது. கடந்த 24-ஆம் தேதி தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பின் மாணவனுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.