நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் 160 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
நியோமேக்ஸ் நிதி நிறுவன முக்கிய இயக்குநர்களின் 160 வங்கி பரிவர்த்தனை கணக்குகள் முடக்கம் என தகவல்.
முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நியோமேக்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நெல்லை உள்ளிட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனத்துக்கு தொடர்புடைய 18 இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் பணத்தை கட்டியவர்கள் தங்கள் பணம் திரும்ப கொடுக்கப்படாததை அடுத்து, பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் 100-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறை சில மாதங்களுக்கு முன் தென் மாவட்டத்தில் 17 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் ரூ.22 கோடி வரையில் மோசடி நடந்ததாக கூறப்பட்டது. நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்கள், முகவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் 18 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த சகாயராஜா, பத்மநாபன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த நிலையில், நியோமேக்ஸ் நிதி நிறுவன இயக்குநர்களின் 160 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரை கூறுகையில், நியோமேக்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்த லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மொத்தம் ரூ.22 கோடி வரை மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நியோமேக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியனை கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். நியோமேக்ஸ் நிறுவனம் 5000 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக முதலீட்டாளர்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.