16 லட்சம் கோடி ரூபாயும் முழுதாக திரும்ப வராது.! ராகுல் காந்தி விளக்கம்.!
Rahul Gandhi : தள்ளுபடி செய்யப்பட்ட 16 லட்சம் கோடி ரூபாய் முழுதாக திரும்பி வசூல் செய்ய முடியாது என் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தற்போது நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அடுத்தகட்ட தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதேபோல தேர்தல் பிரச்சார களம் நாளுக்கு நாள் பரபரப்பாக இயங்கி வருகிறது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி வாக்குறுதி பற்றி பிரதமர் மோடி, தனது தேர்தல் பிரச்சாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், காங்கிரஸ் கட்சி, தங்கள் வாக்குறுதியில் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களை அதிக குழந்தைகள் பெற்றவர்களிடம் பகிர்ந்து கொடுத்து விடுவார்கள் என்றும் விமர்சித்து வந்தார்.
காங்கிரஸ் அதனை முற்றிலும் மறுத்தது. அதேபோல, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடிக்கு நெருக்கமான 22 பேரின் 16 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் , அதனை காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் வசூல் செய்து மக்களுக்கு கொடுப்போம் என்பது போலவும் பேசியிருந்தார்.
மேலும், இதுகுறித்து அண்மையில் டெல்லியில் பேசிய ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அதில், மோடி அரசு 22 பேரின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளது. அதனை முழுமையாக திரும்ப பெற முடியாது எங்களுக்கு தெரியும். அந்த கடன் தொகை கணக்கிட்டு, அதில் இருந்து சிறிய தொகையை மட்டுமே வசூல் செய்து அதனை 90 சதவீத மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள் செயல்படுத்த செலவு செய்வோம் என விளக்கம் அளித்தார்.
மேலும் பேசிய ராகுல் காந்தி, மக்களுக்கு சம நீதி கிடைக்க வேண்டும். எங்கள் வாக்குறுதிகள் மக்களை சென்றடைந்துள்ளது என்பது பிரதமர் மோடி பீதியடைந்ததை பார்க்கும் போதே தெரிகிறது என்றும் அவர் பிரச்சார கூட்டத்தில் பேசியுள்ளார்.