44,125 கோடி முதலீடு., 24,700 வேலைவாய்ப்புகள்.! அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்…

Tamilnadu Ministry Cabinet Meeting - TN CM MK Stalin

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, பொன்முடி, கே.என்.நேரு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், சேகர் பாபு,  அனிதா ராதாகிருஷ்ணன்,  துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பாரிஸ் பயணம் மேற்கொண்டுள்ளதால் அமைச்சர் உதயநிதி இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அமெரிக்க பயணம் :

முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க செல்லும் முதலமைச்சர் 15 நாட்கள் பயணத்திற்கு பின்னர் செப்டம்பர் 14ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று கூறப்பட்டது. அதற்கு முன்னதாக நடைபெறும் அமைச்சரவை கூட்டம் என்பதால் தொழில்துறை சார்ந்து முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்பட்டது.

அதுபோலவே தமிழகத்தில் பல்வேறு தொழில்துறை திட்டங்களுக்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்ப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்ட, ஒப்புதல் பெறப்பட்ட திட்டங்கள் குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

ரூ.44,125 கோடி முதலீடு :

அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், ” தமிழகத்தில் மின்னணு பொருட்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பேட்டரி உற்பத்தி ஆகிய தொழில்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்று 21,340 கோடி ரூபாய் முதலீடு செய்து 1,114 வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

காஞ்சிபுரத்தில் மதர்ஸ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 2600 கோடி ரூபாய் முதலீடு செய்து 2500 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஈரோட்டில் மில்கி மிஸ்ட் நிறுவனம் 1777 கோடி ரூபாய் முதலீடு செய்து 2025 வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.  கிருஷ்ணகிரியில் கிரீன் டெக் நிறுவனம் 1597கோடி ரூபாய் முதலீடு செய்து 715 வேலைப்புகளை உருவாகிறது இப்படியாக 15 தொழில்துறை நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி,  தமிழகத்தில் 44,125 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டு சுமார் 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்படி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ”  என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தொழிலாளர் தங்கும் விடுதி :

மேலும் அவர் கூறுகையில், ” வரும் 1.08.2024ஆம் தேதி சிப்காட் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 206.5 கோடி ரூபாய் செலவீட்டில் 18,720 படுக்கைகள் கொண்ட தொழிலாளர் தங்கும் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மேலும் , காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்ட புதுப்பிப்புகிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக மின் உற்பத்தி அதிகரிக்கும். பசுமை எரிசக்தி திட்ட உற்பத்திக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்று எரிசக்தி மின் உற்பத்திகள் மூலம் 2030க்குள் 20 ஆயிரம் மெகா வாட் மின்சார உற்பத்தி இலக்காக உள்ளது.” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் :

அடுத்து தொழித்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், ” தமிழகத்திற்கு எத்தனை கோடி முதலீடு வருகிறது என்பதை விட எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், அது எந்த மாதிரியான வேலைவாய்ப்புகள் ,  பரவலாக அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கிறதா என்பதை தான் முதலமைச்சர் (மு.க.ஸ்டாலின்) கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறார். ” என்று குறிப்பிட்டார். மேலும் ,  முதலமைச்சரின் அமெரிக்க பயணம் குறித்து அரசு சார்பில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர்கள் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்