சென்னையில் நாளை 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் வினியோகம் – அமைச்சர் அறிவிப்பு..!
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான மிக்ஜாம் புயல் நேற்று சென்னை அருகே வந்தது. இதன் காரணமாக நேற்று சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் எல்லா இடங்களிலும் நீர் தேங்கியது. எல்லா பகுதிகளிலும் மழை நீர் தேங்கியதால் இன்று சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில்,பால்வளத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் பால் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவித்துள்ளார். சென்னையில் நாளை காலை முதல் பால் வினியோகம் முழுமையாக சீரடையும் என தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாதவரம், அம்பத்தூர், சோளிங்கநல்லூர் ஆகிய மூன்று ஆவின் பால் பண்ணைகளிலும் முழுமையாக செயல்பட தொடங்கின. மழைநீரால் சூழப்பட்ட அம்பத்தூர் பால்பண்ணை செயல்படு தொடங்கியது.
பால் உற்பத்தி இயல்புக்கு திரும்பி உள்ளதால் நாளை சென்னையில் வழக்கம்போல 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் வினியோகம் செய்யப்படும் என கூறினார். இதனால் ஆவின் முகவர்கள், சில்லரை வியாபாரிகள் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர் காலத்தில் கூடுதல் விலைக்கு பால் விற்கக் கூடாது என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு பால்விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.