4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் – அமைச்சர் செந்தில் பாலாஜி!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த இன்று முதல் 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுவதால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். தேங்கியுள்ள மழைநீர் பாதிப்பு குறைந்த உடன் விரைவில் அனைத்து இடங்களிலும் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.