மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் 15 பேர் தமிழகம் வந்தடைந்தனர்.!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் முதல் இரு பிரிவினர்கள் இடையே நடந்து வரும் வன்முறையில், 150க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தனர். மேலும், இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்ற வீடியோவும் வெளியாகி, நாடு முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த வன்முறைக்கு இடையில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால், தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெற மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு தமிழாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால். அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், மணிப்பூரிலிருந்து விளையாட்டு வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். அதன்படி, முதற்கட்டமாக மணிப்பூரிலிருந்து ஆசிய போட்டிகளுக்குத் தயாராக 15 விளையாட்டு வீரர்கள் தமிழகம் வந்தடைந்துள்ளார். இவர்களில் 10 வாள்வீச்சு வீரர்கள், 5 வீராங்கனைகள் மற்றும் 2 பயிற்சியாளர்கள் உள்ளனர்.