தீபாவளி பண்டிகை: தமிழ்நாட்டில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!
அக்டோபர் 28ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் மொத்தமாக 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை : அக்டோபர் 31-ல் தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவசங்கர், வரும் அக்டோபர் 28ம் தேதி முதல் 3 நாட்களுக்கு வழக்கமான பேருந்துகளுடன் மொத்தமாக 14,016 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமென அறிவித்துள்ளார்.
அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் 11,176 பேருந்துகளும், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 2,910 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 2 முதல் 4ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 9,441 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
அக்.28 முதல் 30 வரை சுமார் 5.83 லட்சம் பேர் இந்த பேருந்துகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தீபாவளி சமயத்தில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு காண, கட்டண விவகாரம் தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் வரும் 24ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
புகார் எண்
புகார் அளிக்க, 1800 425 6151 044-24749002, 044-26280445 044-26281611 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
எங்கிருந்து இயக்கப்படும்?
கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். காஞ்சிபுரம், வேலூர், திருத்தணி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.