மிக்ஜாம் புயல்: 14 சுரங்கப்பாதை மூடல்.. 6 ரயில்கள் ரத்து.!
மிக்ஜாம் புயலாக (Michaung Cyclone) வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை நேற்று முதல் கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள மிக்ஜாம் புயல் மணிக்கு 14 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது.
இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மழைப் பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படவும், மரங்கள் சாய்ந்து விழும் வாய்ப்பும் உள்ளது. இந்நிலை சென்னையில் கனமழை காரணமாக 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேகமெடுக்கும் புயல்..! சென்னையை புரட்டி போட்ட கனமழை.! பொதுமக்கள் கவனத்திற்கு….
அதன்படி, சைதாப்பேட்டை-அரங்கநாதன் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம், பழவந்தாங்கல், தில்லைநகர், சி.பி.சாலை, வில்லிவாக்கம், வியாசர்பாடி, செம்பியம், கணேசபுரம் ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் இந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி சென்ட்ரல்- மைசூர் சதாப்தி ரயில், சென்ட்ரல் இருந்து கோவை செல்லும் விரைவு ரயில்கள், பெங்களூர் பிருந்தாவன் ரயில், திருப்பதி சப்தகிரி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதோடு ரத்து செய்யப்பட்ட ரயிலில் பயணம் செய்ய டிக்கெட்களை பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அவர்களது கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.