சென்னை நகைக்கடையில் இருந்து 14 கிலோ தங்கம் திருட்டு.! நகைக்கடை உரிமையாளர் மகன் கைது.!
சென்னை நகை கடையில் இருந்து 14 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கில் நகைக்கடை உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சவுகார்பேட்டை என். எஸ். சி போஸ் சாலையில் உள்ள வீரப்பன் தெருவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சங்கம் கிராஃபைட் என்ற நகைக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இதில் சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் கீழ்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் ஆகிய இருவரும் உரிமையாளராக உள்ளனர். இவர் நகைகளை டிசைன் செய்து விட்டு அதனை சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வார்கள்.
அதற்காக வாரத்த்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறக்கப்படும் இந்த நகைக்கடையில் உள்ள தங்க நகைகள் வாடிக்கையாளர்களுக்குக்கு காட்டி விற்பார்கள். அதனையடுத்து மீதமுள்ள நகைகளை லாக்கரில் வைத்து பூட்டி செல்வது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 25ம் தேதி வழக்கம் போல வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக லாக்கரை திறந்த போது 14 கிலோ தங்க நகைகள் திருடு போயுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர் . அதனையடுத்து இந்த வழக்கு குறித்த விசாரணையை யானைகவுனி போலீசார் நடத்தி வந்தனர். கடையின் கதவு மற்றும் லாக்கரின் கதவு உடைக்காமலும், சுவர்களை துளையிடாமலும் லாக்கரில் உள்ள நகைகளை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசார் மத்தியில் எழுந்திருந்தது.
இதனையடுத்து நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த வகையில் 14 கிலோ தங்க நகைகளை நகைக்கடை உரிமையாளரில் ஒருவரான சுபாஷின் மகனான ஹர்ஸ் போத்ரா திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து அவரிடம் இருந்து 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு ஹர்ஸை கைது செய்துள்ளனர்.