பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழப்பு; நாளை ஒரு நாள் கடையடைப்பு..!
உதகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள், உணவகங்கள் செயல்படாது.
நேற்று பிற்பகல் குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்தது. முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்கள் இன்று ராணுவ விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டு நாளை இறுதி சடங்கு நடைபெறவுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை வெலிங்டனில் 13 பேரின் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து, 13 பேரின் உடல்களும் 13 ஆம்புலன்ஸ்களில் சூலூர் விமானப்படை தளத்திற்கு சாலை மார்க்கமாக கொண்டுவரப்பட்டு அங்கிருந்து இராணுவ சிறப்பு விமானம் மூலம் உடல்கள் டெல்லி சென்றது.
இந்நிலையில், உதகையில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள், உணவகங்கள் செயல்படாது என கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகள் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.