இம்மாத இறுதிக்குள் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் – அமைச்சர் அன்பில் மகேஷ்
12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இந்த மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு அறிக்கையை அளித்திருந்தது.
10, 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்த நிலையில், பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருப்பத்தூரில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், பள்ளிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினருடன் ஆலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இந்த மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.