திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1,27 கோடி..!
திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்திற்கான உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த கோவில் இணை ஆணையர் அம்ரித் தலைமை வகித்தார். உதவி ஆணையர் செல்வராஜ் , ரோஜோலி சுமதா , தக்கார் பிரதிநிதி பாலசுப்ரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் சார்பில் மோகன் ,வேலாண்டி , கருப்பன் ஆகியோர் இருந்தனர்.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் உண்டியலில் இருந்து ஒரு கோடியே 25 லட்சத்து 48 ஆயிரத்து 321 ரூபாயும், மேலக்கோபுர திருப்பணி உண்டியலில் இருந்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 538 ரூபாயும் இருந்தது.
மொத்தமாக ஒரு கோடியே 27 லட்சத்து 859 ரூபாய் வசூலானது.இதில் வெளிநாட்டு நோட்டுகள் 252 , தங்கம் 780 கிராம் , வெள்ளி 16 ஆயிரத்து 700 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.