தமிழகத்திற்கு ஒன்றிய அரசு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
இன்று சென்னையில் மக்கள் நால்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை 3,300 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 122 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார். 59,060 ஆம்போடெரிசின் பி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் தடுப்பூசிகள் விவரம் குறித்து வெளிப்படையாக கூறப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை 1.58 லட்சம் பேருக்கு தமிழகத்தில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும், கையிருப்பில் 63,460 தடுப்பூசிகள் மீதம் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு ஒன்றிய அரசு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கேற்ப தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்பட்டு கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.