12 பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
கடந்த சில நாட்களாக திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் ரயில்கள் பராமரிப்பு பணியால் தாமதமாக வருகின்றன.
தண்டவாள பராமரிப்பு காரணமாக திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தாமதமாகி உள்ள காரணத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதில், ஒரு சில பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருச்சி கோட்டத்திற்கு உட்பட 12 முன்பதிவில்லா பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி – ராமேஸ்வரம், திருச்சி – ஈரோடு, திருச்சி – தஞ்சை, தஞ்சை – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – விழுப்புரம், திருச்சி – கரூர், திருச்சி – காரைக்கால், அரக்கோணம் – வேலூர் ஆகிய பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் ரயில் தண்டவாளத்தை இணைக்கும் இண்டர் லாக்கிங் பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.