12 மணி நேர வேலை மசோதா..! தொழிற்சங்கத்துடன் அமைச்சர்கள் ஆலோசனை!
12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது.
சென்னை தலைமை செயலகத்தில் 70க்கும் மேற்ப்பட்ட தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசின் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசு கொண்டு வந்துள்ள 12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதாவுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சட்ட மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், இந்த மசோதாவை தமிழக அரசு வாபஸ் பெற போவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்த சமயத்தில், 12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை சென்னை செயலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தலைமை செயலாளர் இறையன்பு, அமைச்சர்கள் வேலு, அன்பரசன், கணேசன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில், தொமுச, அண்ணா தொழிற்சங்கம், ஏஐடியூசி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.