பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடக்கம்!
இன்று 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கிய நிலையில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்று வருகிறது.
9 லட்சத்து 7 ஆயிரத்து 20 மாணவ மாணவிகள் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களில் 40 ஆயிரத்து 689 பேர் தனித் தேர்வர்கள். தமிழ் முதல் தாள் தேர்வு தவிர அவரவர் மொழிப்பாடங்களை எடுத்த மாணவர்களும் அந்தந்த மொழிப் பாடத் தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 794 மையங்களும் சென்னையில் மட்டும் 156 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தம் 50 ஆயிரத்து 584 பேர் தேர்வெழுதுகின்றனர். தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் உள்ள 103 புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 45 ஆயிரத்து 380 அறைக் கண்காணிப்பாளர்களும் 4 ஆயிரம் பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் விடைத்தாள் சேகரிப்பு மையம், வினாத்தாள் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன
முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் முறைகேடுகளில் ஈடுபடுவது தெரியவந்தால் பள்ளியின் அங்கீகாரம் அல்லது தேர்வு மைய அங்கீகாரம் ரத்துச் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.