11-ம் வகுப்பு மாணவர்களே ரெடியா இருங்க…நாளை காலை 10 மணிக்கு – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.
தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் முன்னர் வெளியிட்டார்.அதன்படி,தமிழகம்,புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
இதுபோன்று தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனைத்தொடர்ந்து,10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தில் கடந்த மே மாதம் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்ற நிலையில்,இந்த பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 27-ஆம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி,தேர்வர்கள் tnresults.nic.in & dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அதே சமயம்,பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கை பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.