11 எம்எல்ஏக்கள் விவகாரம் : சபாநாயகர் தீர்ப்பு அளிக்கவில்லை-ஸ்டாலின்
11 எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் தீர்ப்பு அளிக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்தும் சட்ட மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதை கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதுகுறித்து அவையிலே கேள்வி எழுப்பினோம்.18 எம்எல்ஏக்கள் சேர்ந்து முதலமைச்சரை மாற்றவேண்டும் என்று ஆளுநரிடம் மனு அளித்த நிலையில் சபாநாயகர் அந்த 18 பேரை உடனடியாகத் தகுதி நீக்கம் செய்தார். ஆனால் ஆட்சியே நீடிக்கக்கூடாது என்று 11 எம்எல்ஏக்களும் எதிர்த்து வாக்களித்தார்கள் . 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் தீர்ப்பு அளிக்கவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.