10 ஆம் வகுப்பு ரிசல்ட்:தமிழில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 100க்கு 100 – முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள்!
10 ஆம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே ஒரே ஒரு மாணவர் மட்டும் தமிழில் 100க்கு 100 எடுத்துள்ளார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை 10 மணிக்கு வெளியிட்டார்.அப்போது செய்தியர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகம், புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.
ஆனால்,10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளை இன்று நண்பகல் 12 மணி முதல் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை https://tnresults.nic.in , https://dge2.tn.nic.i ,https://dge.tn.gov.in, https://dge1.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண்,பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.மேலும்,மாணவர்களின் தேர்ச்சி விவரம் அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில்,தமிழில் ஒரே ஒரு மாணவர் மட்டும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.அதைப்போல,ஆங்கிலத்தில் 45 மாணவ,மாணவியரும்,கணிதப்பாடத்தில் 2,186 பேரும்,அறிவியல் பாடத்தில் 3,841 பேரும்,சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதே சமயம்,10-வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில், 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர்.இதில்,மாணவிகள் 94.38% (4.27 லட்சம்), மாணவர்கள் 85.83% (3.94 லட்சம்) பேர் தேர்ச்சி பெற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 886 அரசுப்பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் 97.22% தேர்ச்சி விகிதம் பெற்று முதலிடத்தில் உள்ளது.மேலும்,97.15% பெற்று பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடத்திலும்,95.96% பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாவது இடத்திலும்,மதுரை 95.09% பெற்று நான்காவது இடத்திலும்,ராமநாதபுரம் மாவட்டம் 94.26% தேர்ச்சி விகிதம் பெற்று 5-வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.