All The Best மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்!
10th Exam : தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ள நிலையில், 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் சமீபத்தில் தான் முடிவடைந்தது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், 7.72 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதுபோன்று, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வை 8.20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் பொதுத்தேர்வு ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மாணவர்கள், தனி தேர்வர்கள், சிறைக் கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
அதாவது, தமிழகத்தில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். அதே சமயம் தனித் தேர்வர்கள் 28,000 பேரும், சிறைக் கைதிகள் 235 பேரும் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதும் நிலையில், 4,107 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் முறைகேடுகளை தவிர்க்க மாநிலம் முழுவதும் 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மேலும், பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பு பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுத்தேர்வு முடிந்ததும் ஏப்ரல் 12 முதல் 22 வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன.