தீபாவளியை முன்னிட்டு மொத்தம் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.! அமைச்சர் அறிவிப்பு.!
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே விடுமுறை தினத்தை முன்னிட்டு வெளியூரில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அதே போல இந்தாண்டு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து மட்டும் 10,975 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், மற்ற ஊர்களில் இருந்து 5,920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் மொத்தமாகவும் 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்றும் அறிவித்துள்ளார் .
மேலும், சொந்த ஊர் சென்ற மக்கள் மீண்டும் வேலைக்கு திரும்ப எதுவாக 13, 14, 15 ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்றும், வழக்கமாக 2100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இந்த வருடம் கூடுதலாக 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் தேவைக்கேற்ப அடிப்படை வசதிகள் பேருந்து நிறுத்தத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கோயம்பேட்டில் 10 முன்பதிவு நிலையங்களும், தாம்பரம் மெப்கோவில் ஒரு முன்பதிவு நிலையமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல இணைய வழியிலும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 68000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
பயணிகள் தங்கள் சந்தேகங்களை கேட்பதற்கு, 9445014450 , 9445014436 ஆகிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விழா காலங்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால், 1800-425-6151 என்ற இலவச எண் மூலமாகவோ, 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து நிலையம் வருவதற்கு கூடுதல் இணைப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.