ஏர் இந்தியாவின் தனி விமானம்., நள்ளிரவில் பயணித்த 109 பயணிகள்.! மீதம் உள்ளவர்களின் விருப்பம்.?
நேற்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில், 109 பேர் மாற்று விமானத்தில் ஷார்ஜா புறப்பட்டனர்.
திருச்சி : 144 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் நேற்று (அக்டோபர் 11) ஏர் இந்தியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் ஹைடிராலிக் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அதன் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்படாமல் இருந்துள்ளது.
இதன் காரணமாக, ஷார்ஜா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்படவே, திருச்சியை அந்த விமானம் சுற்றும் நிலை ஏற்பட்டது. விமானத்தை அப்படியே தரையிறக்கினால் தீப்பற்றும் அபாயம் இருந்ததால் எரிபொருள் தீரும் வரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பின்னர் பத்திரமாக திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறங்கியது.
இந்த பதட்டமான சூழலிலும், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு விமானத்தை சாமர்த்தியமாக திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறக்கிய ஏர் இந்தியா விமானிகளுக்கு பயணிகள் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
இச்சம்பவங்களை அடுத்து, ஏர் இந்தியா நிர்வாகம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஷார்ஜா செல்ல முடியாத பயணிகளுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்து தருவதாகவும் அல்லது பயணத் தேதி மாற்றி தரப்படும் என்றும் குறிப்பிட்டது. மேலும் , தங்கள் பயணத்தை ரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு முழுத்தொகையும் திருப்பி அளிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று திருச்சி வந்தடைந்தது. அந்த தனி விமானம் மூலம் 109 பயணிகள் நேற்று நள்ளிரவு ஷார்ஜா புறப்பட்டனர். மீதம் உள்ளவர்களில் சிலர் மட்டுமே தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியமான சூழலை கருத்தில் கொண்டு பயணத்தை முழுதாக ரத்து செய்தனர். பலர் தங்கள் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றியமைத்தனர்.