ஆளுக்கு 1000 ரூபாய்.. 250 கோடி செலவு செய்து ஆள் சேர்க்கிறார்கள் – டிடிவி தினகரன் விமர்சனம்

TTV DHINAKARAN

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நாளை பிரமாண்டமாக மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.

மதுரையில் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, மதுரை விமான நிலையம் பின்புறம் 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் பந்தல் அமைக்கப்படும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக மாநாட்டிற்கு சுமார் 20 லட்சம் தொண்டர்கள் வருகை தருவார்கள் என கூறி வருகின்றனர். சுமார் 15 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் 20க்கும் மேற்பட்ட இடங்களில் உணவருந்தும் வகையில் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாளை மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டிற்கு, ஒவ்வொரு பகுதியில் இருந்து ஒவ்வொருவருக்கும் ரூ.1000 கொடுத்தும், இன்னும் பிற வசதிகள் அளித்தும் அழைக்கப்டுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது ஈட்டிய பணத்தில் இருந்து 250 கோடியை மக்களுக்கு வழங்கி, மாநாட்டிற்கு ஆள் சேர்க்கிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.

ஆனால், மக்கள் பெறுவார்களா? அதிமுக மாநாட்டிற்கு மக்கள் செல்வார்களா என்று தெரியாது. எடப்பாடி பழனிசாமியை நம்பி மக்கள் வரமாட்டார்கள் என்றும் அதிமுக மாநாடு வெற்றி பெறாது எனவும் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கபளீகரம் செய்துவிட்டார். அதிமுகவை ஜனநாயக ரீதியில் நிச்சயம் மீட்டெடுப்போம்.

அமமுக சார்பிலும் மாநாடு நடத்தப்படும் என கூறிய டிடிவி, நானும், ஓபிஎஸ்யும் இணைந்து இனி வரும் காலங்களில் அரசியலில் பயணிப்போம்.  பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் அமமுக இணையுமா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்போம் எனவும் தெரிவித்தார். மேலும், 2026ம் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்