தமிழ்நாடு அரசின் செயல்பாட்டிற்கு 100/100 மார்க் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
ஹெலிகாப்டர் விபத்தின்போது சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு மார்க் போட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
திருவண்ணாமலையில் இன்று மண்டல பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முப்படை தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின்போது, தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் ஊடகத் துறையினர் சிறப்பாக செயல்பட்டனர்.
உயிரைப் பொருட்படுத்தாமல் ஹெலிகாப்டர் எரியும்போது தீயில் இருந்த ராணுவ வீரர்களைத் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். இதனால் தமிழக அரசின் செயல்பாட்டிற்கு 100/100 மார்க் வழங்க வேண்டும். முதல்வரில் தொடங்கி கடைசி மனிதன் வரை, 3 நாட்களுக்குச் செய்த மீட்புப் பணியின் மூலம், இந்தியாவில் பெருமைமிகு மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
இந்தச் சம்பவத்தில் தமிழக அரசுடன் நாங்கள் இருப்போம் என்றும் அரசியலுக்காக பாஜக குற்றம் சுமத்தாது எனவும் தெரிவித்தார். இதற்கு முன்பாக பேசிய அவர், சமூக வலைதளத்தில் கருத்துகளைப் பதிவிடுபவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் தமிழக காவல்துறை கைது செய்கிறது. இதனை பாஜக எதிர்க்கிறது என்றும் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கவே இதுபோன்ற செயல்களை செய்து வருகிறது என குறிப்பிட்டார்.