“கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் உணவகங்களில் 10% விலை தள்ளுபடி”- புதுச்சேரியில் அதிரடி!
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 10% விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த மார்ச் முதல் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், உள்ளிட்ட 8 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதனைதொடர்ந்து அம்மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில், கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.
அந்தவகையில் புதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதன்காரணமாக அம்மாநிலத்தில் திரையரங்குகள் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி, உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அறிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் 10% விலை தள்ளுபடி வழங்கப்படும் என்று புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.
மக்கள் கொரோனா தடுப்பூசி போடா அச்சம் காட்டிவரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சலுகையை அறிவித்துள்ளதாக புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.