உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ1. லட்சம் நிதியுதவி – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.!
விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பாக ரூ.25 லட்சம் நிதியுதவியாக வழங்கவேண்டும் என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள்.
சென்னை : சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. ஏனென்றால், இந்த நிகழ்ச்சியை பார்வையிட லட்சக்கணக்கான மக்கள் கூட்டமாக வருகை தந்திருந்தார்கள். அப்போது கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், இந்த கூட்டநெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டதில் 7 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னதாக தெரிவித்து இருந்தார், இந்த சோகமான சம்பவம் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் மக்களின் பாதுகாப்புக்கு எதுவும் செய்யாமல் இப்படி செய்தது என் என்கிற வகையில் கேள்விகளை எழுப்பி தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் எனவும், தமிழக அரசு 25 லட்சம் வழங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது ” சென்னையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சம் பொதுமக்களை கூட்டியதில் 5 பேர் இறந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த சம்பவத்தில் நிகழ்ந்த மரணங்களை அரசியலாக்க காங்கிரஸ் விரும்பவில்லை.
மொத்தமாக, 15 லட்சம் மக்களை கூட்டிய இடத்தில் மரணங்கள் நிகழவில்லை. அங்கு இருந்து திரும்பும் வழியில் தான் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. இனிவரும் காலங்களில் குடிநீர், மருத்துவம், பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். இந்த விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும்.
குழந்தைகளின் கல்விச் செலவை அறக்கட்டளை ஏற்கும் அதே போல், தமிழக அரசு சார்பாக ரூ.25 லட்சம்
நிதியுதவியாக வழங்கவேண்டும்” எனவும் செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.