பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம்..! அண்ணாமலை அறிவிப்பு.!
கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். பலர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கள்ளக்குறிச்சி வந்துள்ள நிலையில், தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கள்ளக்குறிச்சி வந்துள்ளார்.
அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நேரில் சென்று தங்கள் ஆறுதலை தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், பாஜக சார்பில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தன்னிடம் தொலைபேசியில் கேட்டு இருந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு மத்திய அரசு திட்டங்கள் விரைவாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, கள்ளச்சாராயம் என்றவுடன் ஏதோ ஒரு கிராமத்தில் நடைபெற்று இருக்கும் என மக்கள் நினைக்க வேண்டாம். இந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டது நகர்பகுதியில் தான். அந்த அளவுக்கு அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. கள்ளசாராயத்தால் ஒருவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அறிந்த உடன் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இருந்தால் இவ்வளவு பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்காது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் தவறை மூடி மறைக்கிறது. அரசாங்கத்தின் வேலை அரசை பாதுகாப்பதாகவே இருக்கிறது. இதனை எதிர்த்து நாளை மறுநாள் பாஜக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தும். மதுவிலக்கு துறை என அதற்கு அமைச்சர் இருக்கிறார். அவரது வேலை டாஸ்மாக் வருமானத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது எனவும் பல்வேறு விமர்சனங்களை ஆளுங்கட்சி மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தார்.