ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு இலவச உணவு., 16.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை.!
சென்னையில் நேற்று ஒரே நாளில் அம்மா உணவகம் மூலம் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது. 16.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னை : வடகிழக்கு பருவமழை , சென்னையை நோக்கி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. நேற்று முன்தினமே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்தது.
அதனால், நேற்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. ஆனால், நேற்று , ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மழையின் அளவு வெகுவாக குறைந்து இருந்தது. இருந்தாலும், கனமழையால் மக்கள் பாதிப்படைவதை தடுக்க நேற்று அம்மா உணவகங்கள் மூலம் இலவசமாக உணவு வழங்க அரசு ஏற்பாடு செய்திருந்தது.
மேலும், மழைநீர் தேங்கிய பகுதிகளிலிருந்து மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அங்கும் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. பொதுமக்கள் காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தேவைக்கு ஏற்ப முன்னெச்செரிக்கையாக வாங்கி வைத்துக்கொண்டனர்.
இப்படியாக, நேற்று சென்னையில் மட்டும் ஒரே நாளில் அம்மா உணவகங்கள் மூலம் 1.08 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது. நேற்று காலை மற்றும் பிற்பகல் 78,557 பேருக்கும், இரவு 29,316 பேருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று ஒரு நாளில் மட்டும் 16.5 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இது வழக்கத்தை விட 2 லட்சம் லிட்டர் அதிகம் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.