1 கோடியே 20 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் கோவையில் பிடிபட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது!
1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் கோவையில் பிடிபட்ட வழக்கில் மேலும் இருவர் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை தடாகம் சாலையில் கடந்த 1-ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த ஆனந்தன் என்பவரிடம் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சுந்தர் மற்றும் கீர் முகமது என்ற இருவருடன் சேர்ந்து வேலாண்டிப் பாளையம் பகுதியில் அவர் கள்ளநோட்டு தயாரித்து வந்தது தெரியவந்தது.
அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இயந்திரங்கள், கள்ளநோட்டு அச்சிடப் பயன்படுத்தப்படும் காகிதங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர்.
கீர் முகமது கடந்த 4-ஆம் தேதி ஆனைக்கட்டி பகுதியில் கைதுசெய்யப்பட்ட நிலையில் கடந்த 6-ஆம் தேதி சுந்தர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். கள்ள நோட்டு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், கைது செய்யப்பட்ட 3 பேரையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது திருப்பூரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் விஜயகுமார் ஆகியோர் கள்ள நோட்டுகளை அச்சடிக்க பிரிண்டர் மற்றும் ஜெராக்ஸ் இயந்திரங்களை வாங்கி கொடுத்தது தெரியவந்தது. திருப்பூரில் பதுங்கியிருந்த அவர்கள் இருவரையும் கைது செய்து கோவைக்கு கொண்டு வந்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.