ஸ்மார்ட் சிட்டி திட்டம்- புதுவை நகர பகுதியில் உள்ள 4 சாராய கடைகள் மூடப்படுகிறது..!
நாடு முழுவதும் 100 நகரங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தப்படுகிறது.
‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் புதுவை நகரமும் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு மற்றும் பிரான்சு நாட்டு நிதி உதவியுடன் ரூ.1800 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் புதுவை நகரில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்க முகாமை என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் திட்ட பணிகள் ஒருங்கிணைக்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரின் பிரதான பகுதிகளில் சாராய கடைகள் இருக்க கூடாது. இதற்காக நகரில் உள்ள 4 சாராய கடைகள் நிரந்தரமாக மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி புதுவை ஆட்டுப்பட்டி, முத்தியால்பேட்டை, முத்தையா முதலியார் பேட்டை, காட்டாமணிக் குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 சாராய கடைகளை வருகிற ஜூலை 1-ந் தேதியில் நிரந்தரமாக மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதோடு வம்பாகீரப் பாளையத்தில் கடற்கரை சுற்றுலா திட்டம் செயல் படுத்தப்படுவதால் வழியில் உள்ள திப்புராயபேட்டை சாராய கடை நிரந்தரமாக மூடப்படுகிறது. மேலும், பொரையூர் கிராமத்தில் உள்ள சாராயக்கடைக்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த கடையும் நிரந்தரமாக மூடப்படுகிறது.