ஸ்டெர்லைட் போராட்டம் : "தொடங்குகிறது CBI விசாரணை" விரைவில் வழக்குகள் ஒப்படைப்பு…!!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான பதிவு செய்யப்பட்டுள்ள 178 வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அனைத்து வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் 7-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி கடந்த மே 22-ம் தேதி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.அப்போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையால் காவல்துறை தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தியது. இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகத் தூத்துக்குடியில் உள்ள சிப்காட் காவல்நிலையம், தென்பாகம், வடபாகம், மத்திய பாகம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 காவல் நிலையங்களில் மொத்தம் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றிட கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இதனால் துப்பக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்கும் நிலையில் உள்ளனர். இந்நிலையில், அந்த 178 வழக்குகளுக்கான ஆவணக்கள் வரும் 7ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக தெரிகிறது.
DINASUVADU