ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வலியுறுத்தி உள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது இந்த விவகாரத்தை எழுப்பிய ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், அமைச்சரவையைக் கூட்டி தமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் அரசு தன்நிலையைத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்.
ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தினார். மேலும், கொளத்தூர் தொகுதியில், குடியிருப்புகளை ஒட்டி செல்லும் மின்கம்பிகளால் மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பதால், புதைவட மின்கம்பிகளாக மாற்ற வேண்டும் எனவும், ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கொளத்தூர் தொகுதியில் தற்போது 10கிமீ அளவிற்கு புதைவட மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். புதைவட கம்பிகள் அமைக்க தோண்டும் பணிகளுக்கு அதிகத் தொகை செலவிட வேண்டி இருப்பதால், தற்தாலிகமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார். புதைவட மின் கம்பிகள் அமைக்க புதிய நடைமுறை கண்டறியப்பட்டிருப்பதாகவும், விரைவில் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு முடிவடையும் எனவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.