ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் வெளியேற்றும் பணி முடிவு..!
கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.
இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை குடோனில் இருந்து கடந்த 16-ந் தேதி மாலை ரசாயன கசிவு ஏற்பட்டதாக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அதிகாரிகள் குழுவை அனுப்பி ரசாயன கசிவை உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து ஆலையில் இருந்து கசிவான 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 17-ந் தேதி கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது.
டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டு சேலம், கோவை பகுதியில் உள்ள தனியார் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டன. நேற்று மாலை வரை 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலமாக 900 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இன்று காலையில் டேங்கர் லாரிகளில் கந்தக அமிலத்தை நிரப்பி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. காலையில் 5க்கும் மேற்பட்ட லாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை நிரப்பி சென்றன. இன்று பிற்பகலில் கந்தக அமிலம் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் ஆலையில் இருந்து வெளியேறினார்கள். தொடந்து ஆலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்கள் மற்றும் பொருட்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.