ஸ்டெர்லைட் ஆய்வறிக்கை….பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல்…!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் செய்யப்பட்ட ஆய்வறிக்கையை, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஐவர் குழுவை அமைத்து, 6 வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து தருண் அகர்வால் தலைமையிலான குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் இடங்களில் ஆய்வு செய்தனர். அறிக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 30-ம் தேதி முடிவடைந்தநிலையில், வல்லுநர் குழு சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதனை ஏற்ற பசுமைத் தீர்ப்பாயம், நவம்பர் 30-ம் தேதி ஆய்வறிக்கையை சமர்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, சீலிடப்பட்ட 42 கவர்களில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கையை ஐவர் குழுவினர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணை அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
dinasuvadu.com