ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள கிராமங்களில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்……மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை…!!
சென்னையில் உள்ள தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகள் குறித்து மனுக்கள் பெற்று , கருத்துக்கள் கேட்புக்கூட்டம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன் இறுதி விசாரணை திங்களன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், மாநகர செயலாளர் டி.ராஜா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர்கள் ஷாஜிசெல்லன், சுப்புமுத்துராமலிங்கம், பாத்திமாபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விசாரணையின் இறுதியில் வரும் சனிக்கிழமை வரை 5 நாட்கள் பொதுமக்கள் சார்பிலும், அரசு சார்பிலும், நிர்வாகத்தின் சார்பிலும் மனுக்கள் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 30ஆம் தேதி நீதிபதி தருண் அகர்வால் இந்த அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கே.எஸ். அர்ச்சுணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என மனு அளித்துள்ளோம். தாமிரம் தயாரிப்பதற்கு மூலப் பொருளாக இருக்கக் கூடிய காப்பர் கான்சண்ட்ரேட் மூலம் ஏற்படும் தூசு மாசு குறித்து வலுவாக விவாதத்தில் எடுத்துக் கூறியுள்ளோம். மேலும் அது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 22.2.2018 அன்று மேற்கொண்ட ஆய்வில் 13,800 கிலோ ஆர்சனிக் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு செம்டம்பர் 26ஆம் தேதி கப்பல் மூலம் 10.82 டன் காப்பர் கான்சண்ட்ரேட் வந்துள்ளது. விற்பனையாளர்களே ஒரு டன்னில் 1.8 கிலோகிராம் ஆர்சானிக் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அப்படியென்றால் கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்து 17 ஆயிரம் டன் காப்பர் கான்சண்ட்ரேட் கையாளப்பட்டுள்ளது என்றால் டன்களில் 21 ஆயிரம் டன் ஆர்சனிக் என்பது திட, திரவ, வாயு மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக புற்றுநோய் மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களும் ஏற்பட்டுள்ளன.
மாவீரன் நெப்போலியனை கொலை செய்வதற்காக சிறைச்சாலையில் ஆர்சனிக் பூசப்பட்டது, அவர் இறந்த பிறகு அவருடைய தலையில் இருக்கக் கூடிய முடியில் ஆர்சனிக் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்பது வரலாறு. ஸ்டெர்லைட் ஆலை மூலம் பெரியளவில் ஆர்சனிக் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி இருக்கக் கூடிய கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் காப்பர் ஸ்லாக்கில் இருந்து தாமிரத்தை உருக்கி எடுக்கும் போது அதில் இருந்து வெளியாகும் கழிவு கருப்பு மண், ஒவ்வொரு மாதமும் 50 டன் வெளியேற்றப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 6 லட்சம் டன் கழிவு வெளியேற்றப்படுகிறது. இதை பாதுகாப்பான முறையில் வெளியேற்ற வேண்டும். ஆனால் உப்பாறு ஓடை உள்ளிட்ட 11 இடங்களில் சட்ட விரோதமாக இந்த காப்பர் ஸ்லாக் கொட்டப்பட்டுள்ளது. நீர் வழித்தடத்தில் காப்பர் ஸ்லாக் கொட்டப்பட்டதே கடந்த 2015ஆம் ஆண்டு தூத்துக்குடியில் வெள்ளம் வந்ததற்கு காரணம். மேலும் நிலத்தடி நீர், நிலம் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் நீதிபதி தருண் அகர்வால் தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளித்து அந்த இடங்களை காண்பித்தோம். அவர் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இந்த காப்பர் ஸ்லாக்கில் ஆர்சனிக், யுரேனியம் போன்ற உலோகங்கங்களும் இருக்கின்றன. இதனாலும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள் என்பதையும், எனவே ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களிலும், தூத்துக்குடி மாநகரத்திலும் ஒரு விரிவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதியிடம் தெரிவித்துள்ளோம்.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் இன்று வேலைவாய்ப்பு இல்லை என ஸ்டெர்லைட் நிர்வாகம் அவர்களுக்கு வேண்டப்பட்ட ஒரு சிலரை வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்கிறார்கள். தூத்துக்குடி மாநகர் அருகில் இருக்கக்கூடிய கோஸ்டல் எனர்ஜன், ஸ்பின்னிங் மில், மெஜிரா கோட்ஸ் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. இவையெல்லாம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மக்களின் விருப்பப்படி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது தூத்துக்குடி மாநகர செயலாளர் டி.ராஜா, வழக்கறிஞர்கள் ஷாஜிசெல்லன், சுப்புமுத்துராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
dinasuvadu.com