ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்கத் தயாரா? தமிழக அரசுக்கு நீதிபதி அரிபரந்தாமன் கேள்வி…!
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பிக்கும் தமிழக அரசு, இவ்விஷயத்தில் அரசின் கொள்கையை தெளிவுபடுத்தாதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறி யிருப்பதாவது:நான், வழக்கறிஞராகவும் இருந்தவன், நீதிபதியாகவும் இருந்திருக் கிறேன். ஒரு அரசாணையை அரசு எப்படி பிறப்பிக்கும் என்று எனக்கு மட்டுமல்ல, அரசு உயர் அதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். மக்கள் எழுச்சியினால், ஒரு தொழிற்சாலையை மூடும்போது, எதற்காக மூடப்படுகிறது? அதற்கான காரணம் என்ன? அந்த தொழிற்சாலை செய்த விதிமீறல் என்ன? அத னால் பொதுமக்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் என்ன பாதிப்பு? இதற்கு முன்பு நடந்த விபத்துகள் எத்தனை? அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று விரிவான விளக்கத்தை குறைந்தது 5 பக்கங்களில் கூறி, இந்த காரணங் களால், இந்த தொழிற்சாலை மூடப்படுகிறது என்று அரசாணை வெளியிட்டு இருக்கவேண்டும்.ஆனால், தமிழக அரசு ஏதோ 2 பக்கம் கூட இல்லாத ஒரு அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. இது அரசாணையே இல்லை. அதுவும் இரண்டே இரண்டு பத்தியில், இரண்டுகாரணங்கள் கூறி, தொழிற்சாலையை மூடுகிறோம் என்று தமிழக அரசு கூறுகிறது. இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், உடனடியாக அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டு விடும்.
மீண்டும் தொழிற்சாலை செயல்பட தொடங்கிவிடும். அதை மக்கள் எதிர்த்தால், நாங்கள் என்ன செய்வது? நீதிமன்றம், எங்கள் அரசாணையை ரத்து செய்துவிட்டது. நீதித்துறையின் வேலையே இதுதானே? என்று மக்களின் எல்லா கோபத்தையும், நீதிமன்றத்துக்கு எதிராக திருப்பி விடுவார்கள். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும்போது, தீர்ப்பு வழங்கிய நீதிபதி கள், ஏன் அரசாணையை ரத்து செய்தோம்? அரசாணை சட்டப்படி பலவீனமாக இருந்தது. சரியான காரணங்களை சட்டப்படி கூறாததால், ரத்து செய்தோம் என்று பொது மக்களிடம் போய் விளக்கம் அளிக்க முடியுமா? பொதுக்கூட்டம் போட முடியுமா? அந்த நீதிபதிகளினால் வாய்திறக்கவே முடியாது.
அரசாணையில் என்ன காரணம் கூறப்பட்டுள்ளது. அது சரியா, தவறா என்பதை மட்டும்தான் நீதிபதிகள் ஆய்வு செய்வார்கள். அந்தகாரணத்தை தெளிவாக அரசாங்கம் தான் கூறவேண்டும். அதை செய்யா மல், நீதித்துறையின் மீது பழியை போட தயாராகி விட்டார்கள். உண்மையில் தொழிற்சாலையை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு எண்ணம் இருந்தால், அமைச்சரவையை கூட்டி, கொள்கை முடிவு எடுக்கலாம். அல்லது தற்போது சட்டப்பேரவை நடக்கிறது. சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் இயற்றலாம். ஆனால், அதை எல்லாம் செய்யவில்லை. அந்த அளவுக்கு ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு சக்தி இருக்கிறது.
இவ்வாறு நீதிபதி அரி பரந்தாமன் கூறியுள்ளார்.