வேளாண் பட்டப்படிப்புக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல்.!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், வேளாண் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சிறப்புப் பிரிவினருக்கு ஜூலை ஏழாம் தேதியும், பொதுப்பிரிவினருக்கு ஜூலை 9ஆம் தேதியும் தொடங்கும் என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலும் அதன்கீழ் உள்ள கல்லூரிகளிலும் இளநிலைப் பட்டப்படிப்புக்கு மே 18 முதல் ஜூன் 17வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தமுள்ள 3,422 இடங்களுக்கு 48,676 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலைத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ராமசாமி இன்று கோவையில் வெளியிட்டார்.
இதில் திண்டுக்கல் மாணவி ஆர்த்தி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். கொடுமுடி மாணவி சிறீகார்த்திகா இரண்டாமிடமும், கோவை மாணவி மேனகா மூன்றாமிடமும் பிடித்துள்ளனர். கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் ஜூலை 7ஆம் நாள் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வும், ஜூலை 9 முதல் 13ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான முதற்கட்டக் கலந்தாய்வும் நடைபெற உள்ளதாகத் துணைவேந்தர் ராமசாமி தெரிவித்தார். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 23 முதல் 27 வரை நடைபெறும் என்றும் அவர் கூறினார்.