வேதாந்தாவிடமிருந்தே இழப்பீடு வசூல் செய்ய தூத்துக்குடியில் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம், சுற்றுச்சூழல், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விசாரிக்க கமிஷன் ஒன்று அமைக்க வேண்டும். மொத்த இழப்பீட்டு தொகையையும் வேதாந்தா நிர்வாகத்திடம் இருந்து வசூலிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என போராடிய பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது கடந்த மே 22ஆம் தேதி தமிழக காவல்துறை தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்தது. நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஞாயிறன்று சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்கள் பூரண நலம்பெற்று விரைவில் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற தமது விருப்பத்தையும் தெரிவித்தார்.
சீத்தாராம் யெச்சூரியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், ஆகியோர் உடனிருந்தனர் .
தொடர்ந்து சீத்தாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவல்துறை நடத்திய தடியடி,துப்பாக்கிச்சூடு குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் வந்தபோது மாவட்ட ஆட்சியர் இல்லை. ஆட்சியர் இருந்திருந்தால் துப்பாக்கிச்சூடோ, தடியடியோ நடந்திருக்காது.
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்?
மக்களை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரிகள் தானடித்த மூப்பாக செயல்பட்டுள்ளனர். மக்களைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கதோடு பலரை இடுப்பிற்கு மேல் சுட்டுள்ளனர். எஸ்எல்ஆர் வகை துப்பாக்கிகளை ஸ்னைப்பர்கள் மூலம் பயன்படுத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டிற்கு சில வருவாய்த்துறை அதிகாரிகளை பலியாக்கியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு தண்ணீரை பீய்ச்சியடிக்க வேண்டும். கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளை கடைப்பிடிக்க வில்லை. நேரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான, சம்பவத்தன்று பொறுப்பிலிருந்த மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
வேதாந்தா நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் ஸ்டெர்லைட் ஆலையை துவக்கியது. அங்குள்ள மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தை அடுத்து அம்மாவட்ட ஆட்சியர் ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை துவங்கப்பட்டது வேதாந்தா நிறுவனம் விவசாயிகள் பாசனத்திற்கு பயன்படுத்தும் தண்ணீரை உறிஞ்சியது. மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் குடிநீரையும் சேர்த்து உறிஞ்சியது. தாமிர ஆலையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி ஏராளமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாந்தா நிறுவனத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும். மொத்த இழப்பீட்டுத் தொகையையும் வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.
கடந்த 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கும், அதன் பின்னர் 2014 முதல் பா.ஜ.க விற்கும் வேதாந்தா நிறுவனம் பெருந்தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது. பெரும் நிறுவனங்களிடமிருந்து அதிக அளவிற்கு நன்கொடை பெறுவதற்காக நன்கொடை பெறும் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது பாஜக அரசு என யெச்சூரி கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். 30 முதல் 35 பேர் வரை குண்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பையனுக்கு ஒரு கால் அகற்றப்பட்டு விட்டது. மே-22ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் சமூக விரோதிகளும் வன்முறையாளர்களும் புகுந்து விட்டதாக தமிழக அரசு கூறுகிறது. இதை ஏற்க முடியாது. பேரணி நடைபெற்ற அன்று நான்கு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது போராட்டத்திற்குத் தொடர்பில்லாத திரேஸ்புரம் பகுதியில் துப்பாக்கிச் சுடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்தால் இதுபோன்ற விளைவுகளை மக்கள் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றதா தமிழக அரசு? 13 பேர் பலியாகியுள்ள நிலையில் ஒரு காவல்துறை அதிகாரி மீது கூட அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக முதல்வர் துப்பாக்கிச்சூடு நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டதாக கூறுகிறார். அவர் இப்படிக் கூறியிருப்பது கவலையளிப்பதாகவும், வேதனையளிப்பதாகவும் உள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். உயிர் இழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.