வேங்கை மவன ஒத்தைல தெறிக்கவிட்ட தூத்துக்குடி இளைஞர்..!

Default Image

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார். அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்தவர்களை பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் படுகாயமடைந்தவர்களைச் சந்திப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று (30-05-2018) தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.10, 000-ம் நிதி உதவி வழங்குவதாக ரஜினி அறிவித்தார். பின்னர், ஒவ்வொருவராகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.Image result for யார் நீங்க

சிகிச்சை பெற்று வருபவர்களில் ஓர் இளைஞர் ரஜினியைப் பார்த்து, “யார் நீங்க?” என்று அந்த வீடியோவில் கேட்கிறார். அதற்கு ரஜினியோ “நான் ரஜினிகாந்த்” என்று சொல்கிறார். “ரஜினிகாந்த் என்பது தெரிகிறது, எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என அந்த இளைஞர் மீண்டும் கேட்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த், “நான் சென்னையிலிருந்து வருகிறேன்” என்று சொன்னதும், “சென்னையிலிருந்து வருவதற்கு நூறு நாள் ஆகுமா?” என அந்த இளைஞர் கேட்க, ரஜினி மிகவும் இறுக்கமான முகத்துடன் சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார்.

அந்த இளைஞர் குறித்து விசாரித்ததில், அவருடைய பெயர் சந்தோஷ் என்பதும், `அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர்’ என்பதும் தெரியவந்தது. போலீஸாரின் தாக்குதலில் பலத்தக் காயமடைந்து தலையில் பத்துத் தையல்கள் போடப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் போனில் தொடர்புகொண்டு பேசினோம். “தூத்துக்குடியில் நாங்கள் நூறு நாள்களாகப் போராடினோம். அப்போதெல்லாம் நடிகர் ரஜினிகாந்த் எங்களைச் சந்திக்கவோ, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கவோ வரவில்லை. போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். பலர் மரணத் தருவாயில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் நடந்து இன்றோடு எட்டு நாள்கள் ஆகின்றன. இத்தனை நாள்களாக, இந்தச் சம்பவம் பற்றி ரஜினிகாந்த் வாய்திறக்கவில்லை.Image result for யார் நீங்க

பாதிப்புக்குள்ளானவர்களை வந்து சந்திக்கவும் இல்லை. இன்று எதற்காக வருகிறார்? அதுவும் ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட பிறகு அவர் வந்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடவில்லை என்றால் ஒருவேளை அவர் வந்திருக்கமாட்டார். தற்போது அவர் வந்ததன் பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருக்கிறது. இன்னும், சில தினங்களில் `காலா’ படம் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இனியும் மக்களைப் போய்ச் சந்திக்கவில்லை என்றால் அவருடைய படம் தமிழகத்தில் ஓடாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் தூத்துக்குடிக்கு வந்து எங்களைச் சந்தித்து நிதி உதவி வழங்குகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதனால்தான் எனக்குக் கோபம் வந்து, அவரை அப்படிக் கேட்டேன். எங்களால் எப்படிப் போராடி வெற்றிபெறத் தெரிந்ததோ. அதுபோல எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் எங்களுக்குத் தெரியும்” என்றார் சந்தோஷ்.

சில சமூக விரோதிகளால்தாம் கலவரம் ஏற்பட்டது” என ரஜினி பேட்டியளித்திருப்பது பற்றிக் சந்தோஷிடம் கேட்டபோது, “நாங்கள் சமூக விரோதி என்பதை இவர் பார்த்தாரா அல்லது போராட்டத்தில் சமூக விரோதிகள் கலந்துகொண்டார்கள் என்பதை ரஜினி தனது ஏழாவது அறிவை வைத்து உணர்ந்தாரா? நூறு நாள் போராட்டத்தில் ஒரு நாளாவது எங்களுடன் இணைந்து போராடியிருந்தால்தான் அவருக்குக் கருத்துச் சொல்ல தகுதி உண்டு. எனவே, எங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு எந்தத் தகுதியும் கிடையாது” என்றார் ஆவேசமாக.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்