வெளியானது காலா! ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி!
இன்று அதிகாலை ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் காலா திரைப்படம் கர்நாடகாவில் 130-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று வெளியாகிறது.
முன்னதாக இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் இன்று உலகின் பல நாடுகளில் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த், காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது. இதையடுத்து காலா திடைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். அதற்கு நீதிமன்றம், “கர்நாடகாவில் காலா திரையிட எந்த தடையும் இல்லை. அரசு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.
இருப்பினும் கன்னட அமைப்பினரும், கர்நாடக வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்தும் காலா படத்தை எதிர்த்து போராட் டம் நடத்துவோம் என அறிவித்தனர். மேலும், “காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக செயல்பட மாட்டேன். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கூடாது என ரஜினி அறிக்கை வெளியிட வேண்டும்” என நிபந்தனை விதித்தனர்.
இதனை ரஜினிகாந்த் ஏற்க மறுத்த நிலையில், கன்னட அமைப்பினரின் போராட்டம் வலுத்தது. இதையடுத்து காலா திரைப்படத்தின் கர்நாடக விற்பனை உரிமையை வாங்கிய கோல்டி நிறுவனம் படத்தை வெளியிடும் முடிவை கைவிடுவதாக நேற்று அறிவித்தது. இதையடுத்து கன்னட திரைத்துறையில் மூத்த தயாரிப்பாளரான கனகபுரா சீனிவாஸ் காலா திரைப்படத்தின் கர்நாடக மாநில உரிமையை வாங்கினார்.
இதுகுறித்து கனகபுரா சீனிவாஸ் கூறுகையில், “காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகாவுக்கு எதிராக எதையும் பேசவில்லை. இதனால் கன்னட மக்களின் மனம் புண்படவில்லை. கர்நாடகா முழுவதும் 130-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலா வியாழக்கிழமை வெளியாகும்” என அறிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் குமாரசாமி கூறுகையில், “கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் அதனை எங்களால் மீற முடியாது. அதனால் காலா திரைப்படத்தை திரையிடுவதற்கும், திரையரங்கு பாதுகாப்புக்கும் அரசு உதவும். தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால், காலா திரைப்படத்தை வெளியீட்டு தேதியை மாற்றி வைக்கலாம். இப்போது சூழல் உகந்ததாக இல்லை” என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.